பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் மலையை சுற்றி கிரிவலம் சுற்ற ஏதுவாக சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலகுண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், தினந்ேதாறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகளவு வருவர்.

மேலும் இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. அந்த திருவிழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக்கோயிலுக்கு செல்ல மொத்தம் 400 படிகள் உள்ளன. மலையடிவாரத்தில் பக்தர்களின் வாகனங்கள் செல்ல கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. மேலும் வத்தலக்குண்டு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மலையை சுற்றி பாதியளவுக்கு ஏற்கனவே கோட்டைப்பட்டி தார்ச்சாலை உள்ளது. வடக்கு பகுதியில் மட்டும் சாலை அமைத்து விட்டால் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்ல முடியும். எனவே கிரிவலம் செல்ல ஏதுவாக மலையின் வடக்கு பகுதிக்கும் சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த சமூகஆர்வலர் சாந்தினி கூறுகையில், ‘ஆண்டுக்கு ஆண்டு சென்றாய பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே கிரிவலம் சுற்ற ஏதுவாக மலையின் இன்னொரு பகுதிக்கு சாலை அமைத்து விட்டால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் கோயிலும் வளர்ச்சி அடையும்’ என்றார்.

Related Stories: