டீசலை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மூலம் பல் சக்கரத்தில் இயங்கும் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்க ரூ.10 கோடியில் புதிய மலை ரயில் இன்ஜின் வந்தது

மேட்டுப்பாளையம் :  மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு ரூ.10 கோடியில் புதிய மலை ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள என்ஜின்கள் நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயிரம் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை இயக்கப்படுகிறது.

தற்போது தரமான நிலக்கரி கிடைக்காததால்  நிலக்கரி என்ஜின் பயன்படுத்துவது இல்லை. இதனால்   பர்னஸ் ஆயில் மூலம் நீராவி உற்பத்தி செய்யப்பட்டு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை பயன்படுத்த தென்னக ரயில்வே முடிவு செய்து அதற்காக முயற்சிகளில் இறங்கியது.

இதற்காக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டீசலை எரிபொருளாக பயன்படுத்தி நீராவி இன்ஜின் தயாரிக்கும் பணி நடந்தது. ரூ.10 கோடி செலவில் முழுக்கு முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் புதிய மலை ரயில் என்ஜின் தயாரிக்கப்பட்டது. இந்த மலை ரயில் என்ஜின் திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு டாரஸ் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.

இந்த இன்ஜின் உலகிலேயே பல் சக்கரத்தில் டீசலை  எரிபொருளாக பயன்படுத்தி நீராவி மூலம் இயக்கப்படும் முதல் மலை ரயில் என்ஜின்  என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். விரைவில் இந்த இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு பயணிகள் ரயிலுடன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related Stories: