ஞானவாபி மசூதி சிவலிங்கம் வழக்கின் தீர்ப்பு 2-ம் முறையாக ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் தொடர்பான தீர்ப்பை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் 2வது முறையாக ஒத்திவைத்துள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம், வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, ‘வீடியோ’வாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை   மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க கோரிய வழக்கை விசாரித்த ஞானவாபி மாவட்ட நீதிமன்றம், அதன் மீதான தீர்ப்பை நேற்று வழங்குவதாக தெரிவித்து இருந்தது. அதன்படி,  ஞானவாபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஷ்வேஷா, தனது தீர்ப்பை வழங்க நீதிமன்ற அறைக்கு வந்தார்.

அப்போது, இந்து அமைப்புகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கார்பன் டேட்டிங் சோதனையை நாங்கள் கேட்கவில்லை. இந்த விவகாரத்தில் அறிவியல் ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள் கூறியதுபோல் அங்கு சிவலிங்கம் இருந்ததா? அல்லது நீரூற்று இருந்ததா? என்பதை மட்டுமே கண்டறிய வேண்டும்,’ என கோரினார். அதை ஏற்ற நீதிபதி, எதிர்மனுதரர்களான இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு பதிலளிக்க அவகாசம் அளித்து வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 11ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: