நத்தம் அருகே சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்து வரும் மேற்கூரை: சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அச்சம்

நத்தம்: நத்தம் அருகே, சிறுகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவில், மேற்கூரை ஈரமடைந்து சேதமடைந்துள்ளதால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நத்தம் அருகே உள்ள உறுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலகத்தின் கீழ் உலுப்பக்குடி, வத்திப்பட்டி, கோசுகுறிச்சி, செந்துறை, சிறுகுடி ஆகிய ஊர்களில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிறுகுடியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை கடந்த 1998ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி சுமார் 24 ஆண்டுகளாகிறது.

இந்த கட்டிடத்தை கடந்த ஆட்சி காலங்களில் பொதுப்பணித்துறை முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள முளைத்த செடிகளால் ஈரமடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வந்தது. இங்கு வரிசையில் நின்று நோயாளிகள் சீட்டு பதிவு செய்தல், டாக்டர்கள் அமர்ந்து சிகிச்சையளித்தல் ஆகியவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்பகுதியின் மேற்கூரை சேதம் அடைந்ததையொட்டி, இங்கு வரும் நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும், தற்போது மழை காலம் தொடங்க உள்ளதையொட்டி, பராமரிப்பு பணிகளை முறையாக செய்து, அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சம் தவிர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது குறித்து  சுகாதார நிலைய வட்டாரத்தில் கூறியதாவது: இது குறித்து முறைப்படி நடவடிக்கைக் காக பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, புறநோயாளிகள் பிரிவை அருகிலுள்ள யோகா மருத்துவக்  கட்டிடத்திற்கு மாற்றி உள்ளோம்’ என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் கடந்த 1998ல் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே, பெரும்பாலான கிராமப்புற மக்கள் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். எனவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களையும் சம்மந்தப்பட்ட துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைக்காலம் தொடங்குவதற்குள் பராமரிப்பு பணிகளை நிறைவேற்றி கட்டிடத்தின் உறுதித்தன்மை பாதுகாப்பதுடன், அங்கு வந்து செல்லும் நோயாளிகளின் அச்சத்தை போக்கிட வேண்டும்’ என்றனர்.

Related Stories: