சைபர் குற்றங்களுக்கு எதிராக 115 இடங்களில் சிபிஐ ரெய்டு: ரூ.1.8 கோடி ரொக்கம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: நிதி மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 115 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இதில் ரூ.1.8 கோடி பணம் மற்றும் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இணைய வழியில் நிதி மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் அப்பாவி மக்கள்  பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்பிஐ கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் நிதி மோசடி குற்றங்களில் தொடர்புடைய 87 இடங்களில் சிபிஐயும் 28 இடங்களில் மாநில போலீசாரும் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் செயல்பட்டு வரும் சர்வதேச சைபர் குற்ற கிரிமினல் கும்பல்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கம். டெல்லி, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில் ரூ.1.8 கோடி ரொக்கம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் ரூ.1.89 கோடி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. புனே, அகமதாபாத்தில் போலி கால் சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: