எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்; 95% முடிந்தது பிலாஸ்பூரிலா? மதுரையிலா?: ஜே.பி நட்டாவின் சொந்த மாநிலத்தில் திறப்பு

பிலாஸ்பூர்: பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறக்கப்பட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் பொட்டல் காடாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜக தேசிய தலைவரின் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசம் பிலாஸ்பூரில் கடந்த 2017ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

சுமார் 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த அதிநவீன மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஒன்றிய  அமைச்சர்  அனுராக் தாக்கூர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த மருத்துவமனையின் பணிகள் தீவிரமாக்கப்பட்டு தற்போது திறப்பு விழா கண்டுள்ளது.

அதேநேரம் கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் முடிக்கப் படாமல் இன்னும் பொட்டல் காடாகவே இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளது’ என்று கூறினார். இவர் தனது சொந்த மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துமனையின் பணிகள் 95% முடிந்துள்ளதாக கூறுவதற்கு பதிலாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்துள்ளதாக கூறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: