8 ஆண்டுகளுக்குப் பிறகு மங்கள்யான் செயலிழந்தது? இஸ்ரோ தகவல்

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கள்யான் விண்கலம் செயல் இழந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ரூ.450 கோடியில் இந்தியாவில் மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1ம் தேதி புவி ஈர்ப்பு பரப்பை மங்கள்யான் விண்கலம் கடந்து சென்றது. 2014ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் அது நிலை நிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக சுற்றி வந்தது. செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் மங்கள்யான் தொடர்ந்து அனுப்பி வந்தது. உபரி எரிபொருளால் மங்கள்யான் விண்கலம் கூடுதலாக 6 மாதங்கள் செயல்படும் என இஸ்ரோ முதலில் தெரிவித்தது. ஆனால் விஞ்ஞானிகளின் கணிப்பை தாண்டி மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டது. இந்நிலையில், செவ்வாய் கிரக ஆய்வில் 8 ஆண்டுகளை நிறைவு செய்த மங்கள்யான் தற்போது செயல் இழந்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று தகவல் தெரிவித்தனர். அதன் எரிபொருளும், பேட்டரியும் தீர்ந்து விட்டதாக கருதுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக கடந்த மாதம் 27ம் தேதி மங்கள்யான் விண்கலத்தில் இருந்து சிக்னல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. இதனால் விண்கலம் செயல் இழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமீபத்தில் ஏழரை மணி நேரம் நீண்ட கிரகணங்கள் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து கிரகணங்கள் ஏற்பட்டன. கிரகணம் ஏற்படும் சமயத்தில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தாக்குபிடிக்கும் வகையில் மட்டுமே விண்கலத்தின் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேட்டரிகள் தீர்ந்து போயிருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர். எனினும், மங்கள்யான் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் அதை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்புகள் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட பிறகு முறையான அறிவிப்புகள் வெளிவரும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: