காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே-சசிதரூர் நேரடி போட்டி: திரிபாதி வேட்புமனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆரம்பத்தில் சோனியா ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், கெலாட்டுக்குப் பிறகு யாரை ராஜஸ்தான் முதல்வராக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக, மேலிடத்தின் ஆதரவுடன், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே களமிறக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முன்தினம் மல்லிகார்ஜூனா கார்கே, திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில், 3 பேரின் வேட்புமனுக்களை ஆய்வு செய்த காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி, திரிபாதி வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக கட்சி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘மொத்தம் 20 படிவங்கள் வரப்பெற்றன. கார்கே தரப்பில் 14 படிவங்களும், சசிதரூர் தரப்பில் 5, கே.என்.திரிபாதி தரப்பில் 1 படிவம் தரப்பட்டது. இதில் கார்கே, சசிதரூர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. திரிபாதி தாக்கல் செய்த மனுவில், அவரை முன்மொழிந்த ஒருவரின் கையெழுத்து ஒத்துப்போகவில்லை, மற்றொருவரின் கையெழுத்து 2 முறை போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது’’ என்றார். இதன் மூலம், கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஜி23 தலைவர்கள் உட்பட பெரும்பாலான மூத்த தலைவர்கள் கார்கேவை முன்மொழிந்து அவரது வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதால், அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் கேரள மாநில காங்கிரசும் கார்கேக்கு நேற்று ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் 8ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். கார்கே, சசிதரூர் இருவரில் யாருமே வேட்புமனுவை வாபஸ் பெறாத பட்சத்தில் தேர்தல் நடைபெறும். இதில் வாக்குரிமை பெற்ற 9,000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள்.

*எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதைத் தொடர்ந்து, மல்லிகார்ஜூனா கார்கே மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். கார்கே ராஜினாமா செய்ததை அடுத்து மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

*உபி மாநில தலைவர் நியமனம்

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக பிரிஜ்ஜால் கப்பாரியை சோனியா காந்தி நேற்று நியமித்துள்ளார். மேலும், அம்மாநில காங்கிரசின் 6 பிராந்தியங்களுக்கான புதிய தலைவர்களும் நேற்று நியமிக்கப்பட்டனர். உபி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் லல்லு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories: