இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கர்நாடகாவில் ராகுல் ஆவேசம்

பெங்களூரு: ‘இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நான் மேற்கொண்டுவரும் பாதயாத்திரையை  எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ம் தேதி குமரியில் பயணத்தை தொடங்கிய அவர், தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் நடை பயணம் செய்து வந்தார். நேற்று அவர்  சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் வழியாக கர்நாடகாவில் நுழைந்தார்.

அவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா  தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், குண்டல்பேட்டை  நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கர்நாடக  மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய ராகுல், ‘ஒன்றியத்தில்  ஆளும் பாஜ அரசு எதிர்க்கட்சிகளை அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது.  நாட்டில் உள்ள பெரிய ஊடக நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் பிடியில் உள்ளதால், மக்கள் பிரச்னைக்காக நான் உள்பட  எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கேள்வியும் வெளியாவது இல்லை.

மக்கள் அன்றாடம் அனுபவித்து வரும் துயரங்களை நேரில் காணவே பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறேன். காலை  தொடங்கி மாலை வரை தினமும் 7 மணி நேரம் பாதயாத்திரை செல்கிறேன். இந்த பயணத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கர்நாடகாவில் 21 நாட்கள் நடக்கும் யாத்திரையில் இடையில் தாயார் சோனியா காந்தியும் சகோதரி  பிரியாங்காவும் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: