பெண் நிருபருக்கு ஆபாச மிரட்டல்; மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி போதை பொருள் பயன்படுத்தினாரா?.. போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: யூடியூப் சேனல் பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி பேட்டியின்போது போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. முதன்முதலாக நாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் ஸ்ரீநாத் பாசி ஆபாசமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக பெண் நிருபர் கொச்சி மரடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாசி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது போதைப் பொருள் பயன்படுத்தி இருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நாத் பாசி போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தாரா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரது நகம், முடி மற்றும் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் ஸ்ரீநாத் பாசி மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: