இருமாநில அட்டவணை அடுத்த மாதம் வெளியீடு; தேர்தல் ஆணைய குழு குஜராத் பயணம்: இமாச்சல் பிரதேசம் செல்லவும் திட்டம்

புதுடெல்லி: குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் அட்டவணை அடுத்த மாதம் வெளியிட உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தல் ஆணைய குழு இன்று குஜராத் செல்கிறது. குஜராத்தில் கடந்த 1998ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. கேசுபாய் படேல் தொடங்கி, நரேந்திர மோடி (தற்போது பிரதமர்), ஆனந்திபென் படேல் (தற்போது உத்தரபிரதேச ஆளுநர்), விஜய் ரூபானி, பூபேந்திர படேல் (தற்போதைய குஜராத் முதல்வர்) ஆகியோர் முதல்வராக பதவி வகித்தனர். வரும் டிசம்பர் வாக்கில் குஜராத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

கடந்த முறை நடந்த சட்டப் பேரவை தேர்தல் அட்டவணை 2017ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 182 தொகுதிகளில் அதே ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. அதேபோல் இமாச்சல் பிரதேசத்திற்கும் அதே ஆண்டு டிசம்பர் நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் அட்டவணை வெளியிட ஒரு மாதமே உள்ள நிலையில் தலைமை தேர்தல் கமிஷன் குழு இன்று குஜராத் செல்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர் மாநிலங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். அதன்பின் இந்த குழு இமாச்சல் பிரதேசம் செல்லும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: