பாளை மார்க்கெட் நவீனமயமாக்கும் பணி விரைவில் துவக்கம்: போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 360 கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை காந்தி மார்க்கெட்டை நவீனமயமாக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதையொட்டி ஜவஹர் மைதானத்தில் 148 கடைகள் விரைவில் செயல்பட உள்ள நிலையில், பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 360 தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.100 கோடிக்கு பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம் உள்ளிட்ட சில பணிகள் நிறைவுற்ற நிலையில், நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், டவுன் மார்க்கெட், வர்த்தக மையம் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பாளை காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு நவீனமயமாக வணிக வளாகம் கட்ட கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால், அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அத்திட்டம் தற்காலிகமாக தள்ளிப்போனது. இந்நிலையில் வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகம் இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை காந்தி மார்க்கெட்டை நவீனமயமாக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

ஜவஹர் மைதானத்தில் 148 கடைகள் விரைவில் செயல்பட உள்ள நிலையில், பழைய போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 360 தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்காக போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் தகர கூரைகள் அமைக்கப்பட்டு, கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பாளை மார்க்கெட்டில் ஏற்கனவே இடிக்கப்பட்ட 4 கடைகள் மட்டுமே இப்போது ஜவஹர் மைதானம் பக்கம் சென்றுள்ளன. அங்கு மின் இணைப்பு முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே மற்ற கடைகள் அங்கு தற்காலிகமாக செல்ல முடியும்.

இந்நிலையில் 360 தற்காலிக கடைகள் போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. தரமான ஆங்கிள்களை வைத்து அங்கு கடைகள் அமைக்கப்பட வேண்டும். கடைகளுக்கு எல்கை வரையறை செய்து, ஷட்டர்கள் அமைத்த பின்னரே பாளை காந்தி மார்க்கெட்டை வியாபாரிகள் காலி செய்ய முன்வருவர். இன்னும் ஒரு மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவு பெறும் என நினைக்கிறோம்.’’ என்றனர்.

Related Stories: