சண்டிகர் பல்கலைக்கழக விவகாரம் போல் ஐஐடி மாணவிகளின் கழிவறையை எட்டிப் பார்த்த இளைஞர் கைது: மும்பை போலீஸ் அதிரடி

மும்பை: சண்டிகர் பல்கலை விவகாரம் போன்று மும்பை ஐஐடி மாணவிகளின் கழிவறையை எட்டிப் பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழக விடுதியின் குளியலறையில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்து வெளியிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சக மாணவி, அவரது ஆண் நண்பர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

மாணவிகளின் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சண்டிகர் பல்கலைக்கழக விவகாரம் போன்று மும்பை ஐஐடியிலும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐஐடி மாணவிகள் கழிவறைக்குள் எட்டிப்பார்த்த குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் டிசிபி மகேஷ்வர் ரெட்டி கூறுகையில், ‘மும்பை ஐஐடி-யின் மாணவிகள் கழிப்பறைக்குள் இளைஞர் ஒருவர் எட்டிப்பார்ப்பதாக பேசப்பட்டு வந்தது.

இதையடுத்து ஐஐடி காவலர்கள் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரை கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அந்த இளைஞரை கைது செய்துள்ளோம். அவரது செல்போனின் கழிவறையை புகைப்படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. அவரது செல்போன் தடயவியல் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அறிக்கை வந்த பிறகு அவர் மீதான விசாரணை மற்றும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எதற்காக பெண்களின் கழிவறைக்குள் எட்டிப் பார்த்தார் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. அவருடன் சேர்ந்து மேலும் சிலர் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் விசாரிக்கிறோம்’ என்றார்.

கேரள மாணவர் தற்கொலை

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பக்வாராவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர் (21), டிசைனிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில்  நேற்று பல்கலைக்கழக வளாத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பக்வாரா போலீஸ் எஸ்பி முக்தியார் ராய் கூறுகையில், ‘கேரளாவை சேர்ந்த மாணவர், டிசைன் படிப்பின் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்கொலை குறிப்பு கடிதம் மீட்கப்பட்டு. அதில் அவருக்கு தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: