ஆற்காடு அடுத்த கூராம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

ஆற்காடு : ஆற்காடு அடுத்த கூராம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளில் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தையை விட லாபகரமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள்.

நெல் உற்பத்தி அளவை பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நிர்ணயம்  செய்துள்ள விலையுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள  2000க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும், தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 அதேபோல்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த கூராம்பாடி, அரும்பாக்கம், வணக்கம்பாடி, குப்பிடிசாத்தம் உட்பட 36 இடங்களில் 2022 - 23ம் பருவ நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூராம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சி முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து  மேற்பார்வையாளர் நாகராஜன் முன்னிலையில் முதற்கட்டமாக 5 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

 நிகழ்ச்சியில் ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.வி.நந்தகுமார், ஒன்றிய துணை செயலாளர் எஸ்.விஜயரங்கன், ஊராட்சி மன்ற தலைவர் திலகா கோவிந்தராஜ், கிரி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: