வால்பாறை அருகே வேட்டை பயிற்சியில் ஆண் புலிக்கு பல் உடைந்தது-மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

வால்பாறை : வால்பாறை அருகே, வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டு வரும் புலிக்கு, வேட்டை பல் உடைந்ததால் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வால்பாறை அடுத்துள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலி உடல் மெலிந்து காணப்பட்டது. மேலும் முள்ளம்பன்றி வேட்டையின் போது காயம் அடைந்தது. இதையடுத்து இந்த புலிக்குட்டியை, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மீட்டனர்.

அதன்பின் வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனையின்படி புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதையடுத்து புலியை காட்டில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க வேண்டும் என வனத்துறை உயரதிகாரிகள் திட்டமிட்டனர். இருப்பினும் அதிகாரிகளில் சிலர் வேட்டை பயிற்சி அளிப்பது தவறு எனவும் கருத்து கூறினர்.

இந்நிலையில் 10 ஆயிரம் சதுர அடியில் இயற்கையான சூழலில், மானாம்பள்ளி வனச்சரகத்தில், பரம்பிக்குளம் அணை கரையோரம், பிரம்மாண்ட கூண்டு ரூ.75 லட்சம் செலவில் கட்டி, பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஜூன் 5ம் தேதி வேட்டை பயிற்சி அளிக்க பிரம்மாண்ட கூண்டில் புலி விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று உடைந்த புலியின் பல்லில் ஏற்பட்டுள்ள தொற்றை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. வண்டலூர் மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் இணைந்து நேற்று மானாம்பள்ளி வனத்துறை தங்கும் விடுதியில் புலிக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து புலியை வண்டலூர் உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பி நவீன சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடுக்காட்டில் வைத்து வேட்டை பல் இல்லாத புலிக்கு மேலும் பயிற்சி அளிக்க முயற்சிக்க கூடாது எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வால்பாறை பகுதியில் கரடி மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள நிலையில் வேட்டை பல் இல்லாத புலிக்கு மீண்டும் வேட்டை பயிற்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: