உக்ரைனில் கார் விபத்து உயிர் தப்பினார் ஜெலன்ஸ்கி: விசாரணைக்கு உத்தரவு

கீவ்: உக்ரைனில் கார் விபத்துக்குள்ளானதில் லேசான காயத்துடன்  அதிபர் ஜெலன்ஸ்கி உயிர் தப்பினார். உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 200 நாட்களை கடந்து நீடிக்கிறது. சமீபத்தில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களில் இசியம் உள்பட முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டுள்ளது. கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகருக்கு நேற்று முன்தினம் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டார். ஆய்வை முடித்துவிட்டு மீண்டும் கீவ் திரும்பும்போது ஜெலன்ஸ்கியின் கார் விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். இதுகுறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி நிகிவோரோவ் கூறுகையில், ‘ஜெலன்ஸ்கி நேற்று கார்கிவ் பகுதியில் இருந்து புறப்பட்டு கீவ் நோக்கி காரில் சென்றார்.

அப்போது, அவரது கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகன ஓட்டுநருக்கு அதிபரின் மருத்துவ குழு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது,’’ என தெரிவித்தார். இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புடினை ஐநா பொது செயலர் அன்டோனியோ கட்டரெஸ் சந்தித்து பேசினார். அப்போது,`ரஷ்ய உரங்களை உக்ரைனின் கருங்கடல் துறைமுகம் வழியாக கொண்டு செல்வது, ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு உலையின் பாதுகாப்பு, போர் கைதிகள் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

*சீன அதிபர்-புடின் பேச்சு

ரஷ்ய அதிபர் புடினின் வெளியுறவு விவகார ஆலோசகர் கூறுகையில், ‘உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பொருளாதார தடைகளினால் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, சீனா உடனான உறவை வலுப்படுத்துவது குறித்து ஜின்பிங் உடன் புடின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்,’’ என கூறினார்.

Related Stories: