போராட்டத்தில் வக்கீல் மீது தாக்குதல் இன்ஸ்பெக்டருக்கு ரூ1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சீர்காழி: சீர்காழியில் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீலை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 2017ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலின் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளராக இருந்த வக்கீல் வேலு குபேந்திரனை அப்போதைய சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு துரத்தி சென்று தாக்கி கைது செய்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சென்னை மனித உரிமை ஆணையத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த விஷ்ணு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: பொதுவெளியில் வக்கீல் வேலுகுபேந்திரன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது மனித உரிமைக்கு எதிரானது. அவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் அந்த தொகையினை தமிழக அரசு, வக்கீல் வேலு குபேந்திரனுக்கு கொடுத்துவிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலுவின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிங்காரவேலு தற்போது பொறையாறு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: