மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் செங்கமலம் யானை குளித்து மகிழ ரூ.10 லட்சத்தில் நீச்சல்குளம்: திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை குளித்து மகிழ பத்து லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து திறப்புவிழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் கடந்த பல வருடங்களாக செங்கமலம் என்று அழைக்கப்படும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

34 வயதை கடந்த பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் பாகன் ராஜகோபால் வழிகாட்டுதலில் வலம் வந்து அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் பாப்கட்டிங் செங்கமலம் யானை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம் ஏற்கனவே 75 ஆயிரம் ரூபாய் செலவில் ஷவர் வசதியை செய்து கொடுத்துள்ளது.

இந்த நிலையில், செங்கமலம்யானைக்கு கோயில் வளாகத்தில் நீச்சல்குளம் ஒன்று கட்டித்தர வேண்டும் என சட்டமன்ற மதிப்பீட்டு குழுத்தலைவர், மாநில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்ததன் பலனாக நீச்சல்குளம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், கோயில் வளாகத்தில் தாயார் பிரகாரம் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத்தில் 500 சதுரடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப் பில் செங்கமலம்யானை குளித்து மகிழ புதிதாக நீச்சல்குளம் அமைக்கும் பணிகள் செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில் துவங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. புதிதாக கட்டப்படும் நீச்சல் குளத்தில் ஆனந்தமாய் குளித்து மகிழும் நாளை எதிர்நோக்கி பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை ஆவலோடு காத்திருக்கிறது.

Related Stories: