தண்டவாளம் அருகே ஓடியபடி டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற மாணவன் மீது ரயில் மோதியது-மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருமலை : தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் வட்டேபள்ளியைச்சேர்ந்தவர அஜய் (17). இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு (பிளஸ்1) மாணவன். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் அடிக்கடி தனியாகவும், நண்பர்களுடனும் பல்வேறு வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் வட்டேபள்ளி ரயில் தண்டவாளத்திற்கு சென்றார். அங்கு தண்டவாளத்தின் ஓரம் நின்றுகொண்டு  ’டிக் டாக்’ வீடியோ எடுக்கும்படி நண்பர்களை வற்புறுத்தினார்.

அப்போது காஜிபேட்டையில் இருந்து மஞ்சிரியாலா நோக்கி வந்த ரயிலை கண்ட அவர், ரயில் முன் ஓடுவதுபோல் வீடியோ எடுக்கும்படி கூறிவிட்டு தண்டவாளத்தின் ஓரம் ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவ்வாறு வேண்டாம் எனக்கூறி எச்சரித்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ஓடினார். அப்போது ரயில் அஜய் மீது மோதியது.  

இதில் தூக்கி வீசப்பட்டதில் சுருண்டு விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை நண்பர்கள், ரயில்வே போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயில்வே தண்டவாளத்தில் ‘டிக்டாக்’ செய்வது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என போலீசார் பலமுறை  எச்சரித்தாலும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவை வைரல் செய்வதற்காக விபரீதமான முயற்சிகளை மேற்கொண்டு இதுபோன்ற நிலைக்கு ஆளாவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: