மம்தா தொடர்ந்த வழக்கு; சுவேந்து அதிகாரியின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து மம்தா தொடர்ந்துள்ள வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றும்படி பாஜ.வை சேர்ந்த சுேவந்து அதிகாரி வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரி, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ‘2011ம் ஆண்டில் இருந்து மம்தா முதல்வராக இருந்து வருவதால் பல நீதிபதிகள் அவருக்கு ஆதரவாக செயல்படக் கூடும். எனவே, இந்த வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி  உத்தரவிட வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றத்தில் சுவேந்து வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனஞ்ஜெயா, ஒய்.சந்திர சூட், ஹிமா கோலி அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த வழக்கை வேறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டால், உயர் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பாதிக்கும். உங்கள் அரசியலை இங்கு அனுமதிக்க முடியாது. சாட்சிகளின் பாதுகாப்பு அல்லது விசாரணையின் நேர்மை தொடர்பான புகார்களை, உயர் நீதிமன்றத்தால் சரியாக கையாள முடியாது என்று கருதுவது தவறு. விசாரணை தொடங்கட்டும். சாட்சிகள் ஆஜராக முடியாது என்று கூறினால், நீங்கள் உயர் நீதிமன்றத்தையே அணுகலாம்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, மனுவை வாபஸ் பெறும்படி சுவேந்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: