கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை... மழைநீரில் இரு பள்ளி மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அடித்து துவைத்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடான மாறி வருகின்றன. பாம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. சபரிமலை காடுகளில் கனமழையும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும் பாம்பை ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றின் கரைகளை கடந்து, சேறும், சகதியுமாக பாம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனிடையே கோட்டயம் மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவி காவியா மற்றும் அவரது தோழியும் சாலையில் ஓடிய தண்ணீரில் வழுக்கி விழுந்தனர். சுமார் 50மீ தூரம் மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர். மாணவிகள் இருவரும் தண்ணீரில் அடித்துச்செல்லும் காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவிகளை மீட்டனர். அங்கிருந்து 25மீ தூரத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து செல்லும் வாய்க்கால் உள்ளது.

வாய்க்காலுக்கு செல்லும் முன்னரே மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே கேரளத்தில் இடரும் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால், மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல உள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. 

Related Stories: