முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திமுக எம்எல்ஏ ரூ.1 லட்சம் நிதியுதவி: எங்கள் குலசாமி முதல்வர் என பெற்றோர் நெகிழ்ச்சி

சென்னை: முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சிறுமி டான்யாவின் பெற்றோரை சந்தித்து, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம் வழங்கினார். ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களின் மூத்த மகள் டான்யா (9). அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.இவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டான்யாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு சார்பில் செய்துதரப்படும் என அறிவித்தார். அதன்படி முதல்வரின் நேரடி கண்காணிப்பில் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் உத்தரவின்பேரில் அமைச்சர் சா.மு.நாசர் தினமும் மருத்துவமனையில் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து வந்தார். கடந்த 23ம் தேதி சிறுமி டான்யாவுக்கு 10 பேர் கொண்ட மருத்துவக்குழு மூலம் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

முதல்வர் உத்தரவுபடி அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சிறுமி டான்யா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம், சிறுமி டான்யா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் அவரது பெற்றோரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துவிட்டு, மருத்துவர்களிடம் சிறுமியின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, தனது தொகுதி சார்பில் சிறுமியின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.

மகள் டான்யாவை காப்பாற்றிய முதல்வருக்கும், நிதியுதவி அளித்த எம்எல்ஏவுக்கும் கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி தெரிவித்தனர். மேலும் முதல்வரை சந்திக்க நானும், மகளும் ஆர்வமுடன் இருக்கிறோம். தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் இருக்கவேண்டும். எங்கள் குடும்பத்தின் குலசாமி முதல்வர்தான் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

Related Stories: