ஆசிய கோப்பை கிரிக்கெட்; யுஏஇ அணியை வீழ்த்தி ஹாங்காங் தகுதி: இந்தியா, பாகிஸ்தானுடன் ஏ பிரிவில் இடம் பிடித்தது

துபாய்: 15வது ஆசிய கோப் பை கிரிக்கெட் தொடர் டி.20 போட்டியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27ம் தேதி முதல் செப்.11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் நேரடி தகுதி பெற்றது. மற்றொரு அணிக்கான தகுதி சுற்றுப்போட்டியில் ஹாங்காங், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய அணிள் பங்கேற்று விளையாடின.

ஓமனில் நடந்த இந்த தகுதி சுற்று போட்டியில் நேற்று கடைசி லீக் ஆட்டத்தில், ஹாங்காங்-யுஏஇ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய ஹாங்காங் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 3 போட்டியிலும் வெற்றிபெற்று முதலிடம் பிடித்த ஹாங்காங் ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றது. குவைத் 2 வெற்றி, ஒரு தோல்வி என 2வது இடத்தையும், யுஏஇ ஒரு வெற்றி, 2 தோல்வி என 3வது இடத்தையும், சிங்கப்பூர் 3 தோல்வியுடன் கடைசி இடத்தையும் பிடித்தன.

ஹாங்காங் அணி, இந்தியா, பாகிஸ்தானுடன் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. லீக் சுற்றில் முதல்போட்டியில் நாளை மறுநாள் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று முதல் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடம்பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி பெறும்.

எடை அதிகமான பேட்டை பயன்படுத்தும் கோஹ்லி: விராட்கோஹ்லி இதுவரை 1.10 கிலோ கிராம் எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார். தற்போது 1.15 கிலோ எடை கொண்ட பேட்டிற்கு மாறி உள்ளார். இது 1.10 கிலா எடை கொண்ட பேட்டை விட சற்று கடினமானது. அற்புதமான மணிக்கட்டு அசைவுகளுடன் திறமையான பேட்டர்களில் கோஹ்லியும் ஒருவர். ஆனால் பேட் எடையில் ஏற்படும் சிறிய மாற்றம் அவருக்கு பந்துகளை நீண்ட தூரம் அடிக்க உதவும். இந்த பேட்டின் விலை ரூ.27 ஆயிரமாகும். விராட் கோஹ்லி இதுவரை 99 சர்வதேச டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். வரும் 28ம்தேதி பாகிஸ்தானுடன் அவர் களம் இறங்குவது 100வது டி.20 போட்டியாகும். கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இழந்து தடுமாறி வரும் கோஹ்லி, ஆசிய கோப்பையில் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு வாய்ப்பு வாட்சன் கணிப்பு: ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அளித்துள்ள பேட்டி: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால் இந்த இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தானுக்கு இப்போது முழு நம்பிக்கை உள்ளது. உண்மையில், அந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தொடர்ந்து ஆசிய கோப்பையை வெல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெறும் என்ற உணர்வு எனக்கு இப்போதுதான் உள்ளது. அவர்களின் பேட்டிங் ஆர்டரில் அதிக ஃபயர் பவரை (அதிரடி வீரர்கள்) பெற்றுள்ளனர். எனவே அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: