ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்


புதுடெல்லி, ஏப். 28: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. அருண் ஜெட்லி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜேக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். பிரேசர் அதிரடியாக விளையாடி வாணவேடிக்கை நடத்த, மும்பை பந்துவீச்சு தவிடுபொடியானது. அவர் 15 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் அரை சதம் விளாசி மிரள வைத்தார். பிரேசர் – போரெல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 114 ரன் சேர்த்தது.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேசர் 84 ரன் (27 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி சாவ்லா சுழலில் நபி வசம் பிடிபட்டார். போரெல் 36 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஷாய் ஹோப் – ரிஷப் பன்ட் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர். சிக்சர்களாகப் பறக்கவிட்டு டெல்லி ரசிகர்களை பரவசப்படுத்திய ஹோப் 41 ரன் (17 பந்து, 5 சிக்சர்) விளாசி லூக் வுட் பந்துவீச்சில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து பன்ட் – ஸ்டப்ஸ் இணைந்து அதிரடியைத் தொடர, டெல்லி ஸ்கோர் 200 ரன்னை தாண்டி எகிறியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தனர்.

பன்ட் 29 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்தது. ஸ்டப்ஸ் 48 ரன் (25 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் படேல் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் லூக் வுட், பும்ரா, சாவ்லா, நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இஷான், ரோகித் இணைந்து துரத்தலை தொடங்கினர். ரோகித் 8, இஷான் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சூரியகுமார் 26 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கலீல் பந்துவீச்சில் வில்லியம்ஸ் வசம் பிடிபட்டார். மும்பை 6 ஓவரில் 65 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற, திலக் வர்மா – ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக 71 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.

ஹர்திக் 46 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), வதேரா 4 ரன் எடுத்து ஆட்டமிழக்க, டெல்லி கை ஓங்கியது. எனினும், திலக் வர்மா – டிம் டேவிட் ஜோடி உறுதியுடன் அடித்து விளையாட மும்பை ஸ்கோர் மீண்டும் வேகம் எடுத்தது. இருவரும் 6வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்து டெல்லிக்கு பயத்தை காட்டினர். டேவிட் 37 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), நபி 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் திலக் வர்மா (63 ரன், 32 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ரன் அவுட்டானது மும்பைக்கு பின்னடைவை கொடுத்தது.

சாவ்லா 10 ரன் எடுத்து கடைசி பந்தில் விக்கெட்டை இழக்க, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. லூக் வுட் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் ரஷிக் கான் 4 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். முகேஷ் குமார் 3, கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். டெல்லி அணி 10 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்து 5வது இடத்துக்கு முன்னேறியது. ஜேக் பிரேசர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: