ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி


லக்னோ: சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டியில் 8வது வெற்றியை பதிவு செய்து 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. லக்னோ தொடக்க வீரர்களாக டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் (8 ரன்), ஸ்டாய்னிஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 2 ஓவரில் 11 ரன்னுக்கு 2 விக்கெட் என லக்னோவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இந்த நிலையில், கே.எல்.ராகுல் – தீபக் ஹூடா ஜோடி பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்தது.

ஹூடா 50 ரன் (31 பந்து, 7 பவுண்டரி) விளாசி அஷ்வின் சுழலில் பாவெல் வசம் பிடிபட்டார். நிகோலஸ் பூரன் 11 ரன்னில் வெளியேறினார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ராகுல் 76 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. பதோனி 18 ரன், க்ருணால் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சந்தீப் 2, போல்ட், ஆவேஷ், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து,7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 71 ரன் (33 பந்து, 7 பவுண்டரி,4 சிக்சர்) விளாசினார். துருவ் ஜூரேல் 52 ரன், பட்லர் 34 ரன் எடுத்தனர். லக்னோ பந்துவீச்சில் யஷ் தாக்குர்,ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டியில் 8வது வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், 16 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது.

The post ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: