குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிரடி வெற்றி!!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிரடி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் 100* ரன்களும், விராட் கோலி 70* ரன்களும் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் குஜராத் – பெங்களூரு அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் கில் 16 ரன்களிலும், சஹா 4 ரன்களிலும் வெளியேறினர். 3வது விக்கெட்டிற்கு கைகோர்த்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் அதிரடியாக விளையாடி 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.அதிரடியாக விளையாடிய ஷாரூக்கான் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரன்களை குவித்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். மில்லர் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 200 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பெங்களூரு அணி பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் டூப்ளசிஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கிங் கோலியுடன் இணைந்த வில் ஜேக்ஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். இருவரும் இணைந்து குஜராத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது, 94 ரன்கள் எடுத்திருந்த வில் ஜேக்ஸ், ராஷித் கான் வீசிய 16 ஆவது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி சதம் விளாசி மிரள வைத்தார். விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 16 ஓவர்களிலேயே 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிரடி வெற்றி பெற்றது.

The post குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிரடி வெற்றி!! appeared first on Dinakaran.

Related Stories: