காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு மாதத்தில் புதிய தலைவர்: மதுசூதனன் மிஸ்திரி பேட்டி

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்ந்தேடுக்கப்படுவார் என்று அந்த கட்சியின் தேர்தல் வழிகாட்டுதலின் தலைவர் மதுசூதனன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

வீடியோ நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கடந்த ஏப்ரல் 16 முதல் மே 31 வரை வட்ட அளவிலான உள்கட்சி தேர்தல் ஜூன் 1 முதல் ஜூலை 20 வரை மாவட்ட தலைவர்கள்  நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை மாநில தலைவர்களுக்கான தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த கால அட்டவணையை முறையாக பின்பற்றி வருவதாக மதுசூதனன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடி புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேதி உறுதி செய்யப்படும் என்கிறார். தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்ததுடன் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த பதவி வேண்டாம் என்றும் மூத்த தலைவர்களிடம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை முன்னாள் சபா நாயகர் மீராகுமார், அசோக் கெலாட் ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை அடுத்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து தற்காலிக தலைவராக சோனியா காந்தி கட்சியை நிர்வகித்து வருகிறார். ஆனால் நிரந்தர தலைவர் இல்லாமல் கட்சி பலவீனம் அடைந்து விட்டதாக மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத்தும், ஆனந்த் சர்மாவும் கட்சி பதவிகளில் இருந்து விலகியுள்ளார்கள்.

Related Stories: