ராதா - கிருஷ்ணன் ஆபாசமாக சித்தரிப்பு; அமேசானுக்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடபட்டது. வீடுகள் தோறும் கிருஷ்ணரை வரவேற்கும் வகையில் மாவிலை தோரணங்கள் கட்டியும் கிருஷ்ணர் பாதத்தை வரைந்தும் பலகாரங்களுடன் வழிபாடு நடத்தினர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிலையில், அமேசான் விற்பனை தளத்தில் கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு  ராதை, கிருஷ்ணன் இருக்கும் ஒவியம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஓவியம், ராதா - கிருஷ்ணரை ஆபாசமாக சித்தரித்து வரையப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு இந்து அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள சுப்ரமணிய நகர் காவல் நிலையத்தில் அமேசான் மீது இந்து அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அமேசானை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளத்தில் வைரலானது. இது மட்டுமின்றி, ‘அமேசான் மற்றும் ஓவியம் இடம் பெற்றிருந்த ‘எக்சாட்டின் இந்தியா’ஆகியவை இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்,’என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய ஓவியத்தை அமேசான் நீக்கியுள்ளது.

Related Stories: