ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் என்பவரை சிறையிலிருந்து விடுவிக்க அவரின் மனைவியிடம் ரூ.215 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நூரா பத்தேகி ஆகியோருக்கு விலை மதிப்புமிக்க பொருட்களை கொடுத்தாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரண்டு நடிகைகளிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் நேறறு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி என்றும், சுகேஷ் சந்திரசேகர் மூலம் ஆதாயம் அடைந்தவர் என்றும் தெரிவித்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் ஜாக்குலின் பெர்னாண்டசை அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்புள்ளது.

இருப்பினும் அவர் வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாக்குலினை குற்றவாளி என அறிவித்துள்ளதால், பாலிவுட் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இலங்கையை சேர்ந்த ஜாக்குலின், மாடலிங் மூலம் இந்தியாவுக்கு வந்து பாலிவுட்டில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories: