ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு: திண்டுக்கல் அருகே புரோக்கர் உட்பட 4 பேர் கைது

மதுரை: திண்டுக்கல் அருகே ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகளை மீட்டு, 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 வெண்கல சாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விலை சொல்லி விற்க முயற்சி செய்வதாக, தென்மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, சென்னை சிலை திருட்டு தடுப்பு காவல்துறை இயக்குநர் ஜெயந்த்முரளி உத்தரவின்பேரில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  

கடந்த 16ம் தேதி சிலைகளை விற்பனை செய்யும் புரோக்கர்களை தொடர்பு கொண்டு, சிலைகளை வாங்குபவர்கள் போல் நடித்து விலை பேசி குற்றவாளிகளிடம் 5 சிலைகளை கொண்டு வருமாறு கூறி, திண்டுக்கல் - பழநி ரோட்டிற்கு வர சொல்லி சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடியை சேர்ந்தவர் யோவேல் பிரபாகரன் (எ) பிரபாகரன் (31), தனது நண்பர்களான ஈஸ்வரன், குமார் ஆகியோருடன் சேர்ந்து, 2021, மே மாதம் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தென்னம்பட்டியில் அருள்மலையிலுள்ள ஆதிநாதபெருமாள், ரெங்கநாயகியம்மன் கோயிலுள்ள சிலைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

கோயிலுக்கு சென்று அங்கிருந்த செயலாளர் சண்முகசுந்தரம், பூசாரி பாண்டியன், பூசாரி ராஜ்குமார் ஆகியோரை கத்திமுனையில் மிரட்டி தனியறையில் அடைத்து வைத்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த பெருமாள், ரூ.தேவி, பூதேவி, சந்திரசேகரர் மற்றும் பார்வதியம்மன் வெண்கல சிலைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக யோவேல் பிரபாகரன் (எ) பிரபாகரன் மற்றும் புரோக்கர்களான திண்டுக்கல்லை சேர்ந்த இளவரசன் (38), பால்ராஜ் (42), தினேஷ்குமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த 5 சிலைகள் மீட்கப்பட்டன. மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிந்து, பிரபாகரன் உட்பட 4 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: