தேர்ச்சி சான்றிதழ் வழங்கக்கோரி சிஇஒ அலுவலக மாடியில் ஏறி மாணவர்கள் தற்கொலை முயற்சி: நெல்லையில் பரபரப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குமாரகோவில தெருவைச் சேர்ந்தவர் பூவலிங்கம் (47). இவரது மகன்கள் பூதத்தான்(17), சிவசண்முகா(15). இவர்கள் அம்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2020-21ம் கல்வியாண்டில் 10 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் அரசு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. ஆனால் சகோதரர்கள் இருவரும் பாஸ் செய்யப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குடும்பத்துடன் வீட்டில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிப்.15ல் அம்பையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி சகோதார்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார், வருவாய்த்துறை, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருடன் ேபச்சுவார்த்தை நடத்தி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவர்கள், தந்தையுடன் கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து மாணவர்களை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் இருவருக்கும் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கீழே இறங்கி வந்தனர்.

பின்னர் மாணவர் சிவசண்முகாவிற்கு 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் பூதத்தானுக்கு 10ம் வகுப்பு அரசு ேதர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கல்வி துறையினர், போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: