அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் காரை மறித்து காலணி வீசி பாஜவினர் ரகளையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு டாக்டர் சரவணன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டாக பாஜகவில் பயணித்தேன். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக பாஜ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவே அமைச்சரை சந்தித்தேன். பாஜகவில் இருந்து விலகுகிறேன். ராஜினாமா கடிதம் கொடுக்க இருக்கிறேன். அடுத்த கட்ட அரசியல் பயணம் பற்றி விரைவில் அறிவிப்பேன். நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் விமானநிலையம் வந்தது.

பாஜ சார்பில் மாவட்ட தலைவரான நானும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். அப்போது, அமைச்சர் காரில் செல்லும் போது விரும்பத்தகாத நிகழ்ச்சி நடந்தது. இது எனக்கு தொடர்ந்து மன உறுத்தலாக இருந்தது. பாஜவுக்கு ஓராண்டு முன்பு வந்தேன். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி; மனஉளைச்சலுடன் பயணித்தேன். இதனால், அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டேன். அமைச்சரும் எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்டார். நான் நிம்மதியாக தூங்குவேன், இனி பாஜவில் தொடர மாட்டேன், மத அரசியல், வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை’ என்றார். அப்போது திமுகவில் இணைவீர்களா? என்று கேட்டதற்கு, திமுகவில் இணைந்தாலும் தவறில்லை. திமுக எனக்கு தாய் வீடு. அதில் மீண்டும் இணைய வேண்டும் என்றெல்லாம் இல்லை. டாக்டர் தொழிலை பார்க்க போகிறேன். பாஜ தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: