விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி கட்டிடங்களை இடிக்கும் பணி ஆரம்பம்: வெடிபொருட்கள் குவிப்பு

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி 40 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் இதை கட்டியுள்ளது. இவற்றை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பலமுறை அது அமல்படுத்தப்படவில்லை. இதனால், வரும் 21ம்  தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான அவகாசம் குறைவாக இருப்பதாக கூறப்பட்டதால், இந்த கெடுவை 28ம் தேதிக்கு நேற்று முன்தினம் நீட்டித்தது. அந்த தேதியில் கட்டிடங்களை இடித்து தரைமட்டாக்கும்படி இறுதி கெடு விதித்துள்ளது. இதனை தொடர்ந்து, கட்டிடங்களை இடிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. கட்டிடம் முழுவதும் 9,400 துளைகள் போட்டு, அவற்றில் வெடிப்பொருட்களை நிரப்பி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டன. இவை துளைகளில் நிரப்பப்பட உள்ளன.

Related Stories: