பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது: கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை

பாங்காங்:  இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் நடத்திய போராட்டதால் நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே, கடந்த ஜூலை 13ம் தேதி மாலத்தீவு சென்றார். அங்கும் மக்கள் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து தப்பி   சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நாட்டில் அவர் அரசியல் தஞ்சம் பெற முயன்றார். ஆனால், சிங்கப்பூர் அரசு அவருக்கு உதவ மறுத்து விட்டது. முதலில் 15 நாட்களும், பிறகு மேலும் 15 நாட்களும் தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளித்தது. இந்த கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்ததால், சிங்கப்பூரில் இருந்து 3 பேருடன் தாய்லாந்துக்கு சென்றார். முதலில் புக்கெட் விமான நிலையத்தில் அவர் தரையிறங்க இருந்தார். ஆனால், அவருடைய விமானம் திருப்பி விடப்பட்டு, பாங்காங்கில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து, பாங்காங்கில் உள்ள நட்சத்திர  ஓட்டலில் கோத்தபய தங்கியுள்ளார். ஆனால், இங்கும் அவருக்கு சிக்கல் நீடிக்கிறது. ‘பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், தாய்லாந்தில் தங்கி இருக்கும் வரையில் ஓட்டலை விட்டு வெளியே வர வேண்டாம்,’ என்று போலீசார் அவருக்கு தடை விதித்துள்ளனர். தனது நாட்டில் 90 நாட்கள் மட்டுமே தற்காலிகமாக தங்கியிருக்க, தாய்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்குள் வேறு நாட்டில் தஞ்சம் அடைவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறது. இதனால், கோத்தபய  வேதனையில் உள்ளார்.

Related Stories: