தண்ணீர் போன்ற குழம்பு வெந்தும் வேகாத ரொட்டி: உபி போலீஸ்காரர் கதறல்

பெரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் போலீசாருக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து கான் ஸ்டபிள் ஒருவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு போலீசாருக்கு கேன்டீனில் வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்து பெரோசாபாத் நகர காவலர் மனோஜ் குமார் என்பவர் கையில் தட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்ணீர் சிந்தும் வீடியோ வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில், கையில் தட்டுடன் நடுவீதிக்கு வந்து திடீரென அழ தொடங்கும் மனோஜ், ‘போலீசாருக்கு கேன்டீனில் வழங்கும் உணவை பாருங்கள்.

தண்ணீர் போன்ற பருப்பு குழம்பு, வெந்தும் வேகாத ரொட்டி வழங்கப்படுகிறது. வயிற்றில் எதுவும் இல்லாதபோது, கடமைகளை எப்படி செய்ய முடியும்?’ என கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மேலும் கூறும் போது, ‘போலீசாருக்கு ஊட்டச்சத்து உணவு அளிப்பதற்காக, ஒரு போலீசாருக்கு ரூ.1,875 ஒதுக்கப்படும் என முதல்வர் யோகி உறுதியளித்த நிலையில், போலீசாருக்கு தரம் குறைந்த உணவு வழங்கப்படுகிறது,’ என வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இது பற்றி விசாரிக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், தாமதமாக பணிக்கு வருதல், அடிக்கடி விடுப்பு எடுத்தல் உட்பட மனோஜ் மீது நிலுவையில் உள்ள 15 குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: