நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் தன்கர்

புதுடெல்லி: நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் (71) நேற்று பதவியேற்றார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வெங்கையா நாயுடு, கடந்த 2017, ஆகஸ்ட் 11ம் தேதி துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். இவரது பதவி காலம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி நடந்த புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர், நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக நேற்று  பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஹமீத் அன்சாரி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்கும் முன்பாக  டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்துக்கு சென்று  தன்கர் மரியாதை செலுத்தினார். துணை ஜனாதிபதியானதை தொடர்ந்து, இனிமேல் மாநிலங்களவைக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார்.

இதுவரை என்னென்ன...

* ராஜஸ்தானில் உள்ள கித்தானா என்ற குக்கிராமத்தில் 1951ம் ஆண்டு, மே 8ம் தேதி ஜெகதீப் தன்கர் பிறந்தார். சட்டம் பயின்றவர்.

* தனது அரசியல் பயணத்தை ஜனதா தளத்தில் இருந்து தொடங்கினார்.

* 1989ம் ஆண்டு முதல் முறையாக ஜனதா தளத்தின் சார்பில் ராஜஸ்தானில் உள்ள ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

* அப்போது, பிரதமராக இருந்த சந்திரசேகரின் அமைச்சரவையில் இவருக்கு ஒன்றிய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1989-1991 வரை 2 ஆண்டுகள் இந்த பதவியை வகித்தார்.

* 1993ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

* நரசிம்ம ராவ் காலத்தில் காங்கிரசில் சேர்ந்த அவர், 2008ல்தான் பாஜ.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

* வீட்டில் முடங்க மாட்டேன்

நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற பிறகு பின்னர் வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், ‘துணை ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பிறகு, தேச சேவையில் இன்னும் முடியாத பயணத்தை தொடர்வேன். இனிவரும் நாட்களில் மக்களுடன் உரையாடுவேன். குறிப்பாக, இளைஞர்கள், விவசாயிகள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவேன்.  வீட்டோடு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 12ம் தேதியில் இருந்து மாற்றுப் பாதையில் பயணத்தை தொடர்வேன்,’ என தெரிவித்தார்.

Related Stories: