கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

திருமலை: திருமணமான சில மாதங்களில் தகராறு ஏற்பட்டதால் கணவரை பிரிந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை திருமணம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் பெண்டிலிமரி அடுத்த மிட்டமிடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் தம்பதி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் சில மாதங்களிலேயே பிரிந்தனர். இளம்பெண் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணுக்கு வேம்பள்ளிராஜீவ் பகுதியை சேர்ந்த மற்றொரு 20 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு திருமணமாகவில்லை. இருவரும் அடிக்கடி சந்தித்து நீண்ட நேரமாக பேசி தங்களது நட்பை வளர்த்தனர். இவர்களது நட்பு, காதலாக மாறியது. லெஸ்பியன் ஜோடியாக மாறிய இருவரும் தங்களது வீடுகளில் இருந்தாலும் அடிக்கடி போனில் பல மணி நேரம் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடியாத நிலையில் தவித்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி இருவரும் கடந்த வாரம் தங்கள் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினர். பின்னர் திருப்பதி மாவட்டம் காளஹஸ்திக்கு கடந்த 6ம்தேதி சென்றனர். அங்கு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கிடையில், தங்கள் மகள்களை காணாமல் அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இதையறிந்த அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வேம்பள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என போலீசாரிடம் முறையிட்டனர்.

கழுத்தில் தாலியுடன் ஒரு பெண்ணும், ஆணின் தோற்றத்தில் மற்றொரு பெண்ணும் வந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரிடமும் விசாரித்தனர். அதில், மேற்கண்ட தகவல்கள் கிடைத்தது. அதன்பிறகு அவர்களது குடும்பத்தினரை வரவழைத்து அறிவுரை கூறினர். பல மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் அவரவர் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: