மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் உள்பட 11 பிரிவினருக்கு 40-50 சதவீதம் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை, கொரோனா தொற்றின் போது ரயில்வே நிர்வாகத்தால் திரும்ப பெறப்பட்டது. அதன் பிறகு, தற்போது தொற்றில் இருந்து விடுபட்டு வரும் இயல்பு நிலை திரும்பியுள்ள போதிலும் இந்த கட்டண சலுகை ரத்து அமலில் உள்ளது. இந்நிலையில், ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் பாஜ தலைவர் ராதா மோகன் சிங் தலைமையில் நடந்தது.

இக்குழு நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சமர்பித்த அறிக்கையில், ‘கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரயில்களில் ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகை திரும்ப பெறப்பட வேண்டும். குறைந்தபட்சமாக, 2ம் வகுப்பு (ஸ்லீப்பர் கிளாஸ்) மற்றும் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். இதனால், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மற்றும் சலுகை தேவைப்படும் மூத்த குடிமக்கள் பயனடைவார்கள்,’ என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் கட்டண சலுகைக்காக ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி செலவிட்டு வருகிறது.

Related Stories: