நீதிபதிகள் முன்பாக மூத்த வக்கீல்கள் ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘மனு தாக்கல் செய்த பிறகு நீதிபதிகள் முன் மூத்த வக்கீல்கள் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கும் போது ஆஜராகும் சில மூத்த வழக்கறிஞர்கள், முன்னதாக தொடரப்பட்ட வழக்குகளை அல்லது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விரைந்து பட்டியலிட வேண்டும் என்றும், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடுவது வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில் தங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவது கிடையாது என இளம் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் உச்ச நீதிமன்றம் தொடங்கியவுடன் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் கபில் சிபல் உட்பட பல மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, இதே போல வழக்கு தொடர்பான முறையீட்டை தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘இனிமேல் மனுக்களை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டுக்கு மூத்த வழக்கறிஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் தினசரி வழக்கு பட்டியலை விசாரிக்க தாமதம் ஆகிறது. மனுதாரருக்கு ஏதேனும் கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் அதனை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று முறையிடலாம். அவர்கள் வழக்கின் முக்கியத்துவம் குறித்த பரிந்துரையை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர் பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என உத்தரவிட்டார்.

Related Stories: