மாவட்ட தலைவருக்கு கடும் எதிர்ப்பு ஆரணி பாஜவில் கோஷ்டி மோதல்: கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ஆரணி: பாஜ மாவட்ட தலைவரை கண்டித்து, ஆரணியில் நடந்த புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தை புறக்கணித்து அக்கட்சியினர் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ சார்பில், ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாஜ புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மால்பின் ஸ்ரீதரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி முன்னாள் நிர்வாகிகள் சிலர், மாவட்ட தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், மாவட்ட தலைவரை கண்டித்தும் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ஜெயகோபி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோபி, வேலு, முன்னாள் நகர தலைவர்கள் பழனி, நாராயணன் ஆகியோர் தலைமையில், திருமண மண்டபம் எதிரே கண்களில் கருப்பு துணியை கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     

அப்போது, பாஜ நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. மூத்த நிர்வாகிகளுக்கு கட்சி சார்பில் நடைபெறும்  எந்த நிகழ்ச்சி குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. எங்களை மதிப்பதுமில்லை. மாற்று கட்சியில் இருந்த வந்துள்ள மாவட்ட தலைவர் அவரது சாதியினருக்கும், உறவினர்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்து கட்சியில் பொறுப்பு கொடுத்து வருகிறார். அதேபோல், பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகளிடம் பணம் கொடுத்தால்தான் புதிய பொறுப்பு வழங்க முடியும் என்கிறார். இதைகேட்டால், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி விடுகிறார். மாவட்ட தலைவர் தவறான செயல்பாடுகளை மாற்றி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாவட்ட தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: