மாநகர கமிஷனர் முன்னிலையில் போலீஸ்காரரிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.பி.: பரபரப்பு தகவல்

சேலம்: சேலத்தில் ரோந்து போலீஸ்காரரை தாக்கிய எஸ்.பி, கமிஷனர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். இதன்மூலம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி ரோந்து போலீசார் நேற்று முன்தினம் காக்காபாளையம் பகுதியில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வந்தனர். அந்நேரத்தில் மேற்கு மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.பாலாஜி,  அவரது வண்டியில் அங்கு வந்தார். சைரன் வைத்த வண்டியை பார்த்ததும், அங்கு நின்று கொண்டிருந்த  போலீஸ்காரர் சிவக்குமார், ஓடிச்சென்று, எஸ்.பி.க்கு வணக்கம் தெரிவித்தார்.

அப்போது அவர், ரேசன் அரிசியை டூவீலரில் கடத்தி செல்லும் ஆசாமியை ஏன் பிடிக்கவில்லை என கூறி திடீரென அவரது கன்னத்தில் பளாரென அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீஸ்காரர், ஏன் என்னை அடித்தீர்கள்? என எதிர்கேள்வி கேட்டார். இதையடுத்து எஸ்.பி, வண்டியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பகல் 2 மணிக்கு எஸ்.பி., பாலாஜி, போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடாவை சந்தித்து நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்தார்.  

பின்னர் தாக்கப்பட்ட போலீசை அவரது அறைக்கு வரவழைத்து கமிஷனர் நேருக்கு நேர் விசாரணை நடத்தினார். தாக்கப்பட்ட போலீசிடம் மன்னிப்பு கேட்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக போலீஸ்காரர் சிவக்குமாரிடம், எஸ்.பி.பாலாஜி மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த போலீஸ்காரர் அவரது கையை பிடித்து மன்னிப்பு கேட்கவேண்டாம் என கூறினார். போலீஸ்காரரின் பெருந்தன்மையை பார்த்தீர்களா? என்று கூறிய கமிஷனர், எஸ்.பி.க்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Related Stories: