ஒரே நேரத்தில் 110 மாணவர்களுக்கு காய்ச்சல்: சட்டீஸ்கர் பள்ளியில் விசாரணை

பல்ராம்பூர்: சட்டீஸ்கர் பள்ளியில் ஒரே நேரத்தில் 110 மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.  சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் வத்ராப்நகர் ஏக்லவ்யா குடியிருப்பு பள்ளியில் 240க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

திடீரென பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் உடல்நிலையும் மோசமடைந்தது. தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், வத்ராஃப்நகர் சிவில் மருத்துவமனையில் 60 மாணவர்களை அனுமதித்தனர். அவர்களில் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டர் தீபக் நிகுஞ்ச் கூறுகையில், ‘பள்ளி மற்றும் மருத்துவமனையில் அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 110 மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது’ என்றார். ஆனால் மாணவர்கள் தரப்பில் பள்ளியின் விடுதியில் சுத்தமும், அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், அறைகள் பற்றாக்குறையால், நான்கு அறைகளில் 240 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினர்.

Related Stories: