ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கையால் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

தென்காசி: குற்றாலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று அளித்த பேட்டி:

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. இதற்கு ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை தான் காரணம். இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அரிசிக்கும் ஒன்றிய அரசு ஐந்து சதவீத வரி விதித்துள்ளனர். மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ஆளுநரை ரஜினி சந்திக்கலாம் அது தவறில்லை. ஆனால் அவர் சந்தித்தபோது ஆளுநர் ஏதேனும் தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தில் ஆறு சதவிகித பங்கு வகிக்கும் தமிழகத்திற்கு 1.2% மட்டுமே மத்திய அரசு திருப்பித் தருகிறது. அதனை அதிகரித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தால் ரஜினி மக்களுக்கு செய்யும் கைமாறாக இருந்திருக்கும்.

மின் கட்டண உயர்விற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் காரணம். ஏழைகளுக்கு இலவசம் மின்சாரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ஆகியவற்றை மத்திய ஒழுங்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கொடுக்கக் கூடாது என்கிறது. அதற்கான திட்டம் தான் உதய் திட்டம். ஒரு காலத்தில் நாம் அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதால் தான் இன்று நாம் ஏற்றுமதி செய்யக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறோம்.

ஒன்றிய அரசின் தவறான நடவடிக்கையால் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு செய்தால் மீண்டும் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.

Related Stories: