நீர் நிலை விவகார வழக்கை ஐகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: சென்னை நீர் நிலை மற்றும் அதன் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மனுதாரர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.‘சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டவையாக உருவாக்க வேண்டும்.  நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்’ என வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இந்த பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத காரணத்தினால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அனைத்து வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை செயளர்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் ஜெ.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரம் தொடர்பாக வி.பி.ஆர்.மேனன் பதிலளிக்க வேண்டும்’ என நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories: