விலைவாசி உயர்வு குறித்து நிதி அமைச்சர் பதில் தரவில்லை: ப.சிதம்பரம் டிவிட்

புதுடெல்லி: விலைவாசி உயர்வு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் டிவிட்டரில்  பதிவிட்டுள்ளதாவது: ஆங்கில பத்திரிகையில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் இன்னும் பதில் கூறவில்லை. நிகழ்காலத்தை பற்றி பேசுவதை விட வரலாற்றை ஆய்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை.

விலையேற்றம் மந்திரத்தால் நிகழ்ந்தது என்றும் அதே போல் இறங்கிவிடும் என்றும் ஒன்றிய அரசு நினைக்கிறது. அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இது மக்களை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நுகர்வு மற்றும் சேமிப்பும் குறைந்து விட்டது. பெண்கள், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த உண்மைகளை அரசு ஏற்க மறுக்கிறது. ஜிஎஸ்டி வரி உயர்வு மக்களை பாதிக்கவில்லை என்று நிதியமைச்சர் நாடாளுமன்றத்தின் இன்னொரு அவையில் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: