ஆரம்பமே அசத்தல் பயிற்சி வகுப்புக்கு கட் அடித்த 40 புதிய எம்பி: 20 பேர் மட்டுமே பங்கேற்பு

புதுடெல்லி: எம்பிக்களுக்கான பயிற்சி வகுப்பில் புதிய எம்பிக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை சார்பில் 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு காணொலி வாயிலாக துவக்கி வைத்து பேசினார். 45 நிமிடங்கள் நடந்த நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவர் லட்சுமி சங்கர் பாஜ்பாய், ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாநிலங்களவையின் புதிய உறுப்பினராக தேர்வான 60 பேரில் வெறும் 20 பேர் தான் இந்த வகுப்பில் கலந்து கொண்டனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவெனில், பாஜ.வின் இளையராஜா உள்ளிட்ட 30 எம்பிக்களில் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பதுதான். திரிணாமுல் கட்சியின் ஒரு எம்பி இதில் கலந்து கொள்ளவில்லை. ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த தலா 2 பேர் பங்கேற்றனர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 5 பேர் கலந்து கொண்டனர். நியமன எம்பி பி.டி. உஷா இந்த வகுப்பில் தவறாது கலந்து கொண்டார்.

Related Stories: