பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்

பெங்களூரு: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்.பி., பிரஜ்வலுக்கு, பெங்களூரு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் கடந்த 26ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்ட பெண்கள் அளித்த புகாரின்பேரில் அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜத எம்எல்ஏவுமான‌ ரேவண்ணா (66) கைது செய்யப்பட்டார்.

ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ள அதிகாரிகள், அவர் வைத்துள்ள தூதரக பாஸ்போர்ட்டைமுடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பிரஜ்வல் வேறு நாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க உதவுமாறு சிபிஐ இயக்குநரகத்தின் உதவியை கோரியுள்ளனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பிரஜ்வலுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாக்கு எதிராக கைது வாரண்ட் கோரி பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தது. சிறப்பு புலனாய்வு குழு மனுவை ஏற்று பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்தார்.

The post பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட் appeared first on Dinakaran.

Related Stories: