காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் ரூ.40 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்ததாக நாடகம்: ராஜஸ்தான் வியாபாரி கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மர்ம நபர்கள் காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்ததாக நாடகமாடிய ராஜஸ்தான் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்தவர் சென்னா ராம்(28). கர்நாடக மாநிலம், மைசூரில் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இவர், கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் லாலு ராம் என்பவரிடம், வியாபாரம் செய்வதற்காக பேன்சி பொருட்கள், குளியல் சோப்பு ஆகியவற்றை அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

அதன்பேரில், லாலு ராம் ரூ.40 லட்சத்திற்கான பொருட்களை வியாபாரி சென்னா ராமுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கான பணத்தை ஜூலை 31ம் தேதி கொடுப்பதாக, சென்னா ராம் தெரிவித்து இருந்தாராம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு அவர், மைசூரில் இருந்து தனது சொகுசு காரில் திருப்பத்தூர் நோக்கி வந்துள்ளார். இதற்கிடையில், திருப்பத்தூர் அடுத்த கோனாபட்டு என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் சென்னா ராம் சிறுநீர் கழிக்க காரை விட்டு இறங்கியபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், பின்னர் காரை அடித்து நொறுக்கிவிட்டு, காரில் இருந்த ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் சென்னா ராமிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் லாலு ராமிடம் சொன்னபடி பணத்தை கொடுக்க முடியவில்லை. பணம் கொடுக்காமல் இருக்க என்ன வழி என்று யோசித்து, காரில் கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்ததாக லாலு ராமுக்கு தெரிவித்து விடலாம் என கருதி அவரே காரை அடித்து உடைத்துவிட்டு, அருகே உள்ள புளிய மரத்தின் மீது மோதி கொள்ளை கும்பல் தாக்குதலில் கார் சேதமானது என்று போலீசாரை நம்ப வைக்க இதுபோல் நாடகம் ஆடியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலி புகார் கொடுத்ததாக வழக்குப் பதிந்து வியாபாரி சென்னா ராமை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: