ஆரணி கோட்டையில் பள்ளியில் வகுப்பை புறக்கணித்துவிட்டு ரோமியோ போல் சுற்றி வரும் மாணவர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆரணி :  ஆரணி டவுன் கோட்டை மைதானத்தை சுற்றி அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் சுப்பிரமணிய சாஸ்திரி ஆகிய மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் ஆரணி டவுன், சுற்றுவட்டார பகுதிகளான இரும்பேடு, ராட்டிணமங்களம், சேவூர், எஸ்.வி.நகரம், பையூர், முள்ளிப்பட்டு, குண்ணத்தூர், வடுக்கசாத்து, அரையாளம், தச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 இந்நிலையில், அரசு ஆண்கள் மற்றும் சுப்பிரமணி சாஸ்திரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் சிலர் தலை முடியை  ரோமியாக்கள் போல்  தலைமுடி வெட்டிக்கொண்டும், சினிமாபானியில் காதணிகள் அணிந்து கொண்டும் பள்ளிக்கு வருகின்றனர். அப்போது, வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது வகுப்புகளை கவனிக்காமலும்,  சகமாணவர்களிடம் கேலி கிண்டல் செய்து கொண்டும் உள்ளனர்.

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சுற்றித்திரியும் மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தலை முடி வெட்டி வர சொல்லியும், பெற்றோர்களை அழைத்து வருமாறும் பலமுறை கண்டித்து வருகின்றனர்.  ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து தலைமுடியை சரியாக வெட்டாமல் அப்படியே வருகின்றனர். இதனால், அந்த மாணவர்களை வகுப்பறைகளில் அனுமதிப்பதில்லை. ஒழுங்காக முடிவெட்டிக் கொண்டு வந்தால்தான் பள்ளியில் அனுமதிக்கப்படும் என கண்டித்து  வீட்டிற்கு  அனுப்பி வைக்கின்றனர்.

அப்படி செல்லும் மாணவர்கள், வீட்டிற்கு செல்லாமல் எல்எல்ஏ  அலுவலகம், கோட்டை மைதானத்தில் சுற்றிவிட்டு மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்கின்றனர். ஆரணி கோட்டை மைதானத்தில்  உள்ள நடைபாதைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு செல்போன்களில் கேம் விளையாடிக் கொண்டும், குட்கா போதை பொருட்களை பயன்படுத்தியும் அரட்டை அடிக்கின்றனர்.

இந்த செயல்களை பார்த்து மற்ற மாணவர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டு பள்ளிக்கு செல்லாமல் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவை மதியம் சாப்பிட்டு விட்டு, சக மாணவர்களுடன் ஆரணி பழைய, புதிய பஸ்நியைங்கள், காந்திசாலைகளில் ரோமியோ போல்  வலம் வந்து பொழுதை கழித்துவிட்டு மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று வருகின்றனர்.

இதுதவிர, கோட்டை மைதானத்தில் பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரியும் மாணவர்களை பொதுமக்கள் கண்டிக்க செல்லும்போது, வாக்குவாதம் செய்கின்றனர். ‘‘எங்களை பெற்றோரே கண்டிப்பதில்லை. நீங்கள் யார் கேட்பதற்கு’’ என்று மிரட்டும் தொனியில் பேசுகின்றனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட  பள்ளி நிர்வாகத்திடமும், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தால் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.   எனவே, இனிவரும் நாட்களில் சுற்றிதிரியும் மாணவர்களை பள்ளி செல்ல பெற்றோர்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதவிர, சுற்றித்திரியும் மாணவர்களை போலீசார் ரோந்து சென்று கவனித்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: