களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் விழா!: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நேரு ஸ்டேடியம்.. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!!

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தரும் சர்வதேச வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் 37 பேருந்துகளிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் 50 பேருந்துகளிலும் வீரர்கள் வருகை தந்துள்ளனர். தப்பாட்டம், கரகம், காவடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சதுரங்க காய்களை கொண்டு ஒலிம்பியாட் துவக்க விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழருடைய வரலாற்றை ஆவணப்படமாக காட்டும் விதமாக பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரங்கில் சங்க காலம் தொடங்கி தற்போது வரை உள்ள வரலாறுகள் அடங்கிய காணொலி காட்சி தொடர்ந்து ஒளிபரப்படுகிறது. தமிழருடைய வரலாற்றை காட்டும் ஆவணப்படத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஜல்லிக்கட்டு, சிலம்பம் அடங்கிய காணொலி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் கட்டிடக்கலையை விளக்குகின்ற வகையில் தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் காணொலியும், திருவள்ளுவர், பாரதியார் என தமிழகத்தின் வரலாறுகளையும், பெருமைகளையும் பறைசாற்றுகின்ற வகையில் காணொலியும் திரையிடப்படவுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி வருகை தருவதற்கு பிரத்யேக நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வர தனி நுழைவு வாயில், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்களுக்கு தனி நுழைவு வாயில் என 3  நுழைவு வாயில்கள் உள்ளன. தொடக்க விழா நடைபெறும் மைய பகுதி அருகே டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. விவிஐபிக்கள், பார்வையாளர்கள் அமர சிறப்பு கேலரியில் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: